தொழிலாளர்கள் மீதான சட்டத்தின் பாய்ச்சல்; எதிர்விளைவுகளும் மாற்றங்களும் | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன்
கோ. நடேசய்யரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரேயே நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிக உரத்துக் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் (1853 - 1924) என்றால் அது மிகையாகாது. இவரது கருத்துக்கள் மிக ஆணித்தரமாகவும் உச்சந்தலையில் சம்மட்டி கொண்டு ஓங்கி அடிப்பது போலவும் காணப்பட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துக்கள், பிரித்தானிய பாராளுமன்ற அங்கத்தினர்களுடன் அவர் கொண்டிருந்த உறவு மற்றும் ஏனைய உலகளாவிய தொழிலாளர் அமைப்புக்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தங்கள் என்பனவாகும். சேர். பொன். அருணாசலம் ஒரு செயல்திறன் மிக்க சிவில் சேவை அதிகாரியாக இருந்து 1913ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் தீவிரமான கிளர்ச்சிக் கருத்துள்ள அரசியல் செயற்பாட்டாளராக இயங்கத் தொடங்கினார். அவர் தான் அழைக்கப்பட்டு கலந்துக்கொண்ட கூட்டங்களில் எல்லாம் தொழிலாளர்கள் மீதான முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பற்றியும் அவ்விதம் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட குற்றவியல் அம்சங்கள் கொண்ட சட்டங்கள் பற்றியும் காரசாரமாக சாடினார