உருத்திரபுரத்தில் நாகரமைத்த புராதனமான கோயில்கள் | பேராசிரியர் சி.பத்மநாதன்
வட, கிழக்கு மாகாணங்களிலே அம்பாறைத் தேர்தல் தொகுதி தவிர்ந்த இடங்கள் பலவற்றில் மிக அண்மைக் காலத்தில் நடைபெற்ற கள ஆய்வுகளின் விளைவாக, ஆதிவரலாற்றுக் காலத்திலே (கி.மு.300-கி.பி.400) தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிய நிலையில் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வவுனியா அருங்காட்சியகத்திற் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் மூலமாகவும் இக்கருத்து உறுதியாகின்றது.
வன்னியிலே காணப்படும் பௌத்த சின்னங்கள் எல்லாம் அங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் அடையாளங்கள் என்ற தவறான கருத்தினை ஹீயூ நெவில் (Hugh Neville) முன்னிலைப்படுத்தினார். புரிந்துணர்வில்லாது அவர் சொன்னவை சுருதிப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டன. அது வரலாற்று ஆசிரியர்களுக்கும் அரச சார்புடைய தொல்லியல் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் வலிமையான நம்பிக்கையாகிவிட்டது. ஆனால் அவருக்கு முன்பு நீரப்பாசனமுறை பற்றி ஆய்வுகள் செய்த ஹென்றி பார்க்கர் (Henry Parker) வேறு விதமான கருத்தை வெளிப்படுத்தினார். தமிழ்ப் பேசும் நாகரே மண்மலைக் குளத்தைக் (முத்தையன்கட்டு) கட்டினார்கள் என்றும் வன்னியில் வாழ்ந்த பௌத்தர்கள் தமிழராய் இருக்கக்கூடும் என்னும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்க்கர் பதிவு செய்துள்ள கருத்துகள் மிக அண்மைக் காலத்திலே கள ஆய்வுகளின் மூலம் கிடைத்த விபரங்களால் உறுதி பெறுகின்றன. தமிழ்ப் பிராமி வரிவடிவங்களிலே தமிழ்ப் பெயர்கள் பொறித்த பல நூற்றுக் கணக்கான தொல்பொருட் சின்னங்கள் கிடைத்துள்ளன. அவை வழிபாட்டுச் சின்னங்கள், பாவனைப் பொருட்கள் என இரு வகைப்படும். அவை அனைத்தும் நாகரோடு தொடர்புடையவை நாகசிற்பங்களிலும், சிவலிங்கம், நந்தி, மயூரம் முதலானவற்றிலும் புத்தர்பாதம், புத்தர் படிமம் போன்றவற்றிலும் மணிணாகன் என்ற பெயரை எழுதுவது வழக்கம். வழிபாட்டிற்குரிய தெய்வங்களையும் அவற்றோடு தொடர்புடைய சின்னங்களையும் நாகர் மணிணாகன் என்றே குறிப்பிட்டனர். அதுபோல நாகர் கோட்டம், சைவக்கோயில், பௌத்தப் பள்ளி, சேதியம் போன்ற வழிபாட்டு நிலையங்களை மணிணாகன் பள்ளி என்று குறிப்பிட்டனர்.
தொல்லியல் திணைக்களத்தினர் தங்கள் பாதுகாப்புத் தலம் என அடையாளப்படுத்திய நிலத்திற்கு வெளியே அதற்கண்மையிலுள்ள ஒரு மரத்தின் கீழே சில செங்கற்களும் தூண்துண்டங்களும் காணப்படுகின்றன. அவற்றைச் சுத்தம் பண்ணி, நீரினாற் கழுவிய பின் அவற்றிலே தமிழ்ப் பிராமி எழுத்துகள் தெரிந்தன; தமிழ்ப் பெயர்களும் வசனங்களும் தெரிந்தன, அவை நாகர் பற்றியவை. நாகரின் கல்லறைகளிற் காணப்படும் இரு வசனங்களும் இவற்றிலே பதிவாகி உள்ளன.