மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி

Wednesday 14 September 2022
00:00
17:33

இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலப்பகுதியில் ஏனைய சமூகங்கள் மூன்றாம் நிலைக்கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளன. 

எழுபதாம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த எமது சகோதர முஸ்லிம் சமூகம், சமூக உணர்வுமிக்கதும் தொலைநோக்கு கொண்டதுமான அதன் அரசியற்தலைவர்கள் மேற்கொண்ட காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக, தொடர்ந்துவந்த காலப்பகுதியில் பாடசாலைக்கல்வியில் துரிதமாக முன்னேற்றமடைந்து, இன்று அச்சமூகத்தினர் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் அரச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதில் வெற்றி கண்டதன் மூலம் தனது இளைஞர்களின் உயர்கல்விக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், சமூக - கலாசார வளர்ச்சிக்கும் உறுதியானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது. 

இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்வோமாயின், மலையகச் சமூகம் செறிந்து வாழும் மலையகப் பிரதேசத்தில் இதே போன்றதொரு பல்கலைக்கழகத்தை அமைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய அறிவுசார் உலகில் மலையக இளைஞர்களும் இணைந்து கொள்ளவேண்டுமாயின், அவர்கள் தமது அறிவாற்றலையும் ஆக்கத்திறனையும் பெருக்கிக்கொள்வது இன்றியமையாததாகும். இதனை அடைந்து கொள்வதற்கு அவர்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்று அமைவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறமுடியாது. நாட்டில் இருக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலாவது தமிழ்மொழிமூல கல்விக்கான வாய்ப்புக்கள் இருந்தபோதும், அவை மலையக மாணவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. 

அறிவாற்றலால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான கல்வி, பயிற்சி என்பவற்றை உறுதி செய்துகொள்வதில் மூன்றாம்நிலைக்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்களிக்கின்றன என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மலையகச் சமூகம் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் அரச பல்கலைக்கழகமொன்றை அமைத்துக்கொள்வதன் ஊடாக அவர்கள் உயர்கல்வியை பெற்றுக் கொள்வதோடு, தமது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனங்காண்பதற்கும், தமது சமூகத்தின் கலை, கலாசார, பாரம்பரியங்களை வளர்த்துக் கொள்வதற்கும் அது உதவியாகவிருக்கும்.

More ways to listen