ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
ஐடா ஸ்கடர் 1912 இல் பெண்களுக்கென தனியான ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டார். அமெரிக்க மிசனரியினரும் ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை. ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை 1918 இல் நிறைவேறியது. ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி 1918.08.12 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்க மருத்துவ மிசனரிகள் மட்டுமன்றி, இங்கிலாந்தின் ஸெனனா மருத்துவ மிசனரியினரும் (Church of England Zenana Missionary Society) 19ஆம் – 20 ஆம் நுாற்றாண்டுகளில் இலங்கையின் வடபகுதியில் மருத்துவ சேவைக்காகத் தங்களது வாழ்வைத் தியாகம் செய்து அருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்கள். இணுவில் மக்லியோட் மகப்பேற்று மருத்துவமனையில் 40 ஆண்டுகளாக மகப்பேற்று மருத்துவராக அரும்பணியாற்றிய மருத்துவர் இசபெல்லா கேர் அம்மையார் பற்றி மிசனரி வரலாற்றாசிரியர்கள் அதிகம் எழுதவில்லை; உலகம் இவரது தன்னலமற்ற சேவையை அறியவில்லை. “கேர் அம்மா என்றும் இணுவில் அம்மா என்றும் யாழ்ப்பாணத்தவர்களால் அழைக்கப்பட்ட இவ் அம்மையாரது சேவையை யாழ்ப்பாணத்துப் பெண்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.