யாழ்ப்பாணக் குயர் விழா: சூழலியலும் குயர் மக்களும் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன்

Monday 28 November 2022
00:00
11:21

குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன.

இலங்கையின் முதலாவது சுயமரியாதை நிகழ்வு (Pride Event) 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஈகுவல் கிரவுண்ட்(Equal Ground) நிறுவனம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வை முன்னெடுத்தது. அந்தக் காலப்பகுதியில் ஈகுவல் கிரவுண்ட்(Equal Ground) நிறுவனத்தின் இயக்குநரான றோசன்னாவின் (Rosanna Flamer Caldera) செயற்பாடுகள் சவால் நிறைந்ததாக இருந்தது.

கடந்த வருடம் (2021) நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் முதலாவது குயர் விழாவானது நேரடியாகவும் இணையவழியிலும் இடம்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த குயர் விழாவானது ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த குயர் விழாவானது பல்வேறுபட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. வழமையான நிகழ்வுகள் குயர் சூழலியல் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன. சூழலியல் சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து விதைப்பந்து சிற்பங்களை உருவாக்கல், கவிதையின் சூழலியல்கள், களப்பயணங்கள் மற்றும் கட்டுருவாக்க முயற்சிகள் போன்ற பல நிகழ்வுகளின் மூலம் இயற்கை நேயச் செயற்பாடுகளை ஊக்குவித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணம் போன்ற பண்பாட்டுக் கட்டுப்பாடுகளும் தந்தையாதிக்கக் கருத்தியல்களும் ஆழமாக வேரூன்றிய ஒரு சமூகத்தில் குயர் விழாவை முன்னெடுக்கின்றமையானது, பால்நிலை சார்ந்த மாற்றுக் கருத்துக்களுக்கான வெளி ஒன்றிருப்பதை புலப்படுத்துகின்றது.

More ways to listen