இனப்படுகொலையை அங்கீகரித்தலின் அரசியல் | இன அழிப்புத் திறனாய்வுச் சொல்லாடல் : ஓர் பன்முக கற்கைநெறி அணுகுமுறை | அருட்தந்தை எழில்
ஈழத்தமிழினம் இறுதிக்கட்டப் போரில் முன்னெப்போதும் இல்லாத, எதிர்பாராத பேரவலத்தைச் சந்தித்திருந்தது. பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் இன அழிப்பு பொறிமுறை 2009 இல் முள்ளிவாய்க்காலில் உச்ச நிலையடைந்தது; தமிழ் இன அழிப்பு ஒரு வரலாற்று அரசியல் நிகழ்முறைமையாக பரிணாமமடைந்தது (Politico - historical process). இதன் பின்னணியில், பின்-முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுக் காலத்தில் இன அழிப்பு கற்கைநெறி தொடர்பில் தமிழில் படைப்புகள் கிடைப்பது தேவையாகின்றது. அந்த வகையில், இன அழிப்பு புலமையில் தமிழில் ஆய்வு விவாதப் பரப்பை ஏற்படுத்துவதன் மூலம், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் ‘இன அழிப்புத் திறனாய்வுச் சொல்லாடல்: ஓர் பன்முக கற்கைநெறி அணுகுமுறை’. எனும் இத் தொடர் ஐ.நா வின் இன அழிப்பு குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தையும் அதனோடு தொடர்புடைய ஏனைய சொல்லாடல்களையும், மூன்றாம் உலக திறனாய்வு விளக்கவுரைக் கண்ணாடியூடாக அணுக முனைகின்றது. இது ஆதிக்க கதையாடல்களுக்கு சவால் விடும் அதே நேரத்தில், பேரரசுக் கட்டமைப்பு அரசியல், தனது ஆதிக்க நலன்களுக்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராய் இருக்கின்றது என்பதையும் வெளிக்காட்டும் என்பது திண்ணம்.