வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்
வவுனியா வடக்கில் நெடுங்கேணியின் தென்னெல்லையில் உள்ள பெரியமடு பிரதேசத்தின் நயினாமடு கிரமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கோடலிபறிச்சான் என்ற காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. இவ்விடத்தை இங்குள்ள சிறிய நடைபாதையில் இருந்து அடர்ந்த காடுகள் ஊடாக நீண்ட நேரக் கால்நடைப் பயணத்தின் பின்னரே அடையமுடிந்தது. இவ்விடத்திற்கு மிக அருகில் பாழடைந்த சிறிய கேணியொன்று காணப்படுகின்றது. அக்கேணியைச் சுற்றி பொழிந்த வெள்ளைக் கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ளன. இவை இங்கிருக்கும் கேணியின் தொன்மையையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் புலப்படுத்துவதாக இருந்தது. இவ்விடத்தின் சுற்றாடலில் பாழடைந்த சில குளங்களும், சிறிய மண்மேடுகளும், அடர்ந்த காட்டுமரங்களுடன் சில புளிமரங்களும், இலுப்பை மரங்களும் காணப்படுகின்றன. அவற்றிடையே அரிதாக சில செங்கட்டிகளும், சிலவகை மட்பாண்ட ஓடுகளும் காணப்பட்டன.