கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்

Saturday 17 September 2022
00:00
21:07

இலங்கைத்தீவின் கரையோரம் மட்டக்களப்பு வாவிக்குத் தெற்கே பிறைத்துண்டு வடிவில் அமைந்திருப்பதால், களப்புகளின் அளவை அதிகரிக்கும் கடுங்காற்று, பருவப்பெயர்ச்சிக் காற்றுகள் என்பன அங்கு அவ்வளவாக செல்வாக்குச் செலுத்தவில்லை (உரு.02). அதனால் அங்கு களப்புகளின் பரப்பு தெற்கே செல்லச் செல்ல சிறுத்துச் செல்கிறது.

கடலுக்குச் சமாந்தரமாக முழுநீளத்துக்கும் களப்புகளின் தொடர் சங்கிலி காணப்படுவதால், கீழைக்கரை அக்களப்புகளின் இருபுறமும் கிழக்கிலும் மேற்கிலும் இரு தனித்தனி நிலப்பரப்புகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இக்களப்புகள் உள்ளூரில் ஆறுகள் என்றே அறியப்படுகின்றன. எனவே கடலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலம் “எழுவான்கரை” (சூரியன் எழுகின்ற கரை – கிழக்குக்கரை) என்றும் ஆற்றுக்கு அப்பாலுள்ள மற்றைய நிலம், “படுவான்கரை” (சூரியன் மறைகின்ற / படுகின்ற கரை - மேற்குக்கரை) என்றும் அழைக்கப்படுகின்றன. எழுவான்கரை ஊர்களும் படுவான்கரை ஊர்களும் தொன்றுதொட்டே ஒன்றோடொன்று கொண்டும் கொடுத்தும் வந்திருக்கின்றன.

கீழைக்கரையில் மொத்தம் இருபத்தேழு ஆறுகள் பாய்கின்றன (Arumugam 1969). ஆறுகள் என்று கூறினாலும் இவை அகலத்தில் மிகக்குறைந்த சிற்றோடைகளே. செய்மதிப்படங்களை ஆராயும் போது, பட்டிப்பளை ஆறு, கூமுனையாறு, மாதுரு ஆறு முதலான ஓரிரு ஆறுகள் மட்டும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பேராறுகளாக ஓடியிருந்திருக்கின்றன என்பதை ஊகிக்கமுடிகின்றது.

கீழைக்கரையின் ஆறுகளில் பெரும்பாலானவை கடலில் நேரடியாகத் திறக்காமல், கடலோரமாக அமைந்துள்ள கரைச்சைகளில் கலக்கின்றன. மகாவலி கங்கை, கல்லாறு, கூமுனையாறு ஆகிய மூன்று மட்டுமே கரைச்சையூடாக அன்றி, கடலில் நேரடியாகக் கலக்கின்றன. அவற்றிலும், கூமுனையாறு மட்டுமே தூய கடற்கழிமுகத்தைக் கொண்ட ஆறாக இருக்கின்றது.

More ways to listen