இலங்கையின் பாலுற்பத்தித் துறை - ஒரு பார்வை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் அன்றைய பால் தேவையின் 80 % உள்ளூர் உற்பத்தியில் இருந்தே நிறைவு செய்யப்பட்டிருந்தது. பல்தேசிய பால் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கைச் சந்தையில் தமது பாலுற்பத்திகளை குறிப்பாக பால் பவுடரை அறிமுகப்படுத்திய பின் படிப்படியாக இலங்கை மக்களின் பால் நுகர்வு கலாசாரம் மாற்றமடையத் தொடங்கியது.
2020 வருட இலங்கை மத்திய வங்கி ஆண்டறிகையின் படி இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் [GDP] விவசாயம் 7 % அளவிலும் விவசாயத்தின் ஒரு கூறாக அமையும் கால்நடை உற்பத்தித் துறை 0.6% ஐயும் கொண்டுள்ளது. இலங்கையில் 1.1 மில்லியன் பசு மாடுகளும், 0.3 மில்லியன் எருமை மாடுகளும் உள்ளன. வருடாந்தம் பசு மாடுகளில் இருந்து 413.6 மில்லியன் லீட்டர் பாலும் எருமை மாடுகளில் இருந்து 77.9 மில்லியன் லீட்டர் பாலும் பெறப்படுகிறது.
இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததன் பின் பல வகையான வெளிநாட்டு கால்நடை வகைகள் மற்றும் அவற்றின் விந்தணுக்கள் கொண்டுவரப்பட்டு பல தூய, கலப்பு இனங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவிலிருந்து சாஹிவால், சிகப்பு சிந்தி பசுக்களும் ஐரோப்பிய வகையான ஜெர்சி, பிரீசியன், அய்சியார் ,அவுஸ்றேலியன் பிரிசியன் சகிவால் [AFS] பசு இனங்களும் இந்திய மூரா மற்றும் இந்தோ - பாகிஸ்தானிய நிலி ரவி எருமை வகைகளும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இனக்கலப்பு செய்யப்பட்டன.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில்தான் அதிக மாட்டுப் பண்ணைகளும் மாடுகளும் உள்ளன.