புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் - பகுதி 1 | பேராசிரியர் சி. பத்மநாதன்

Monday 4 December 2023
00:00
18:20

எழுத்தின்  பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரயாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர்.  அவை நாகரைப் பற்றியவை. தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டவை.  
பதவிகம்பொலவிற் காணப்படும் பிரமாண்டமான பள்ளிப்படை (Dolmen), இவ்வன்கட்டுவவிலுள்ள கல்லறைகள், அங்குள்ள ஈமத்தாழிகள், அவற்றிலே படையல்களை வைப்பதற்குப் பயன்படுத்திய பல்வேறு வகையான மட்கலன்கள் ஆகியன இந்த வழமைக்குரிய முன்னுதாரணங்களாகும்.
நாகரிக வளர்ச்சிக்கு ஏதுவான உற்பத்தி முறையினையும் தமிழ் மொழியினையும் இலங்கையில் அறிமுகம் செய்த நாகர் மூலமாகவே நாக வழிபாடும் சிவலிங்க வழிபாடும் பரவலாயின. கிமு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்த சமயம் பரவியதும் அதில் நாகர் ஈடுபாடு கொண்டனர்.
சமுதாயக் கட்டமைப்பிலே பல்வேறு நிலைகளிலுள்ள நாகர் பௌத்த சங்கத்தாருக்கு வழங்கிய நன்கொடைகளைப் பற்றிய குறிப்புக்கள் அவற்றிலே பதிவுசெய்யப்பட்டுள்ளன.  பௌத்த துறவிகளுக்கு உறைவிடங்களாகக் குகைகளை நாகர் வழங்கியுள்ளனர்.  
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குசலான் மலையின் அடிவாரத்திலே ஐந்தலை நாகவடிவம், புத்தர் பாதம் என்பனவற்றின் உருவங்கள் ஒன்றின் அருகில் மற்றொன்றாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது.
இரண்டிலும் மணிணாகன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நாகவழிபாட்டு முறையினைப் பின்பற்றிய தமிழ் மொழி பேசும் நாகரிடையில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு இவ்விரு வழிபாட்டுச் சின்னங்கள் அடையாளமாகும்.

More ways to listen