மலையக மக்களும் எட்டாக்கனியாக்கப்பட்ட கல்வியும்! | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன்
1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடம் பெற்றிருந்த போதும் பெருந்தோட்டத்துறை இதைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்தது போல் எதுவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி மிக அமைதியாகவே இருந்தது. இதற்கான முக்கியகாரணம் தோட்ட துரைமார்கள் தோட்டத் தொழிலாளரை தொழிற்சங்க ரீதியில் ஸ்தாபனப்படுத்த எந்த ஒரு வெளிச் சக்தியையும் நெருங்க விடாது தோட்டத் தொழிலாளரை தனிமைப்படுத்தி வைத்திருந்தமைதான். 1900 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து அடுத்து வந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் அங்கிலிக்கன், மெதடிஸ்ட், பெப்டிஸ்ட் போன்ற மிஷனரிகளின் முயற்சியால் ஆங்காங்கே பெரியதும் சிறியதுமான பாடசாலைகள் பெருந்தோட்டத்துறை இருந்த பகுதிகளிலும் ஆரம்பமாகின. கிறிஸ்தவ மிஷனரிகள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் தோட்ட துரைமார்களால் முற்றாக இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்டத் துறை வளர்ச்சி அடைந்திருந்த மாவட்டங்களில் சுமார் 68 ஆயிரம் பாடசாலை செல்லக்கூடிய பிள்ளைகள் இருந்த போதும் சுமார் 275 பாடசாலைகளில் 11000 பிள்ளைகளே கல்வி கற்றனர் என்பதிலிருந்து தோட்ட துரைமார்கள் இவர்களுக்கு கல்வி வழங்குவதில் எந்த அளவுக்க