ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைவிலக்கணம் | ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்
காலனிய காலத்திலிருந்தே “இலங்கையின் கிழக்குக்கரை” கிழக்கு மாகாணத்தை சாதாரணமாகக் குறிப்பிடப் பயன்பட்டு வந்த சொல் தான். ஆனால் அதை சமூகவியல் ரீதியில் வரையறுக்கப்பட்ட கலைச்சொல்லாக முன்வைக்கவேண்டிய தேவை ஐரோப்பிய அறிஞர்களுக்கு ஏற்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்கள் ஊன்றிக் கவனிக்கத் தவறிய, அல்லது மேலோட்டமாக மட்டும் தொட்டுச் சென்ற முக்கியமான இரு பண்பாட்டு அம்சங்களை “இலங்கையின் கிழக்குக் கரை”யில் அவர்கள் அடையாளம் கண்டார்கள். முதலாவது, பொதுத் தமிழ்ப் பண்பாட்டுக்கோளத்துக்குப் புறநடையாக பிராமணரோ வேளாளரோ அல்லாத சமூகங்கள் (அதாவது, முக்குவர், சீர்பாதர், திமிலர் சமூகங்கள்) இங்கு சாதிய அதிகார அடுக்கில் மேலே நீடித்து வந்திருக்கின்றன. இரண்டாவது, இங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர் மற்றும் சோனகர் ஆகிய இரு இனக்குழுமங்களிடம் மட்டும் இன்று அவதானிக்க முடிகின்ற தாய்வழிக் குல அடையாளங்களான “குடிகள்” “கிழக்குக்கரை”யின் தனித்துவம், கேரளத்து மருமக்கட்தாயம் போல, இவை தாய்வழியில் தான் கடத்தப்படும் என்பது. சைவக் கோவில்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள வண்ணக்கர், கணக்குப்பிள்ளை போன்ற பதவிகளும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்