காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதா ? | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன்

Saturday 31 December 2022
00:00
06:49

தன்பாலீர்ப்பு(Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள்(Gay) அடங்குவர். இலங்கையில் குறிப்பாக வடபுலத்தை பொறுத்தமட்டில் தன்பாலீர்ப்பாளர்கள் தம்மை வெளிப்படுத்தத் தயாராக இல்லை. அதிலும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள்(Gay தம்மை ஓரளவு அடையாளப்படுத்துகின்ற போதிலும், பெண் தன்பாலீர்ப்பாளர்கள்(Lesbian) தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருப்பதனையே அவதானிக்க முடிகிறது .

தன்பாலீர்ப்பு என்பது அவர்களது அடிப்படை உரிமை சார்ந்த ஒன்று என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் புரிந்துகொள்ளல் என்பது மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ச்சமூகத்தில் பாரிய பின்னடைவாகவே நோக்கவேண்டியிருக்கிறது. பால்நிலை ரீதியில் தமிழ்ச் சமூகம் பின்நோக்கிச் சிந்திப்பதான நிலைப்பாட்டையே காணக்கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு தன்பாலீர்ப்பினர் என்றால் யார்? என்ற புரிதல் இல்லை. தன்பாலீர்ப்பினரைக் கேலி செய்தல் மற்றும் அவதூறு பரப்புதல் என்பன பொது வெளியிலும் ஊடக வெளியிலும் அதிகம் இடம்பெறுகின்றன. தன்பாலீர்ப்பினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைகளை வெகுஜன மற்றும் புதிய ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. தன்பாலீர்ப்பினரை மோசமானவர்களாகச் சித்திரிப்பதன் மூலம் அவர்கள் தொடர்பான தவறான எண்ணப் போக்கைச் சமூகப்பொறுப்பற்ற ஊடகங்கள் மக்களுக்கு வழங்கியிருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்களில் இழிவுபடுத்திச் சித்திரிக்கப்படும், ஊடகக் கற்பிதங்களை உண்மை என நம்புகின்றவர்களாக ஒரு சிலர் இருக்கிறார்கள்.

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தன்பாலீர்ப்பாளர்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான மாற்றங்கள் நிகழ்வதை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகிறது. “வாழ்க்கையை அர்த்தமாக்குவது காதல். காதலிக்கும் உரிமையே நம்மை மனிதனாக்குகிறது. காதலை வெளிப்படுத்துவது குற்றம் என்றால் அது மனிதாபிமானத்திற்கு எதிரானது மற்றும் கொடூரமானது” எனவும் “ இயற்கை எது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது” எனக்குறிப்பிட்டு தன்பாலீர்ப்பினை தண்டனைக்குரிய குற்றம் இல்லை என இந்திய தண்டனைச் சட்டக்கோவையின் 377 ஆவது சரத்தை தென்னாசியாவில் இந்தியா முதன் முதலில் 6 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு நீக்கியதன் மூலம் அறிவித்திருக்கிறது.

More ways to listen