கனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்
ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர். 1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அடிப்படையில் பங்குடமைச் சமூகமாக கனடா விளங்கவேண்டும் என்று கூறப்பட்டதெனினும், சுதேசிகளின் கீழ்ப்பட்ட நிலை தொடரலாயிற்று. சுதேசிகளின் நிலங்களை ஐரோப்பியர் அபகரித்தல், இந்தியர்களுக்கான ஒதுக்கிடப்பகுதிகளை உருவாக்குதல், பழங்குடியினரின் பாதுகாப்பை வழங்கத் தவறிய உடன்படிக்கைகளைச் செய்தல் போன்ற வழிகளில் பழங்குடியினர் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். பழங்குடிமக்கள் விவகாரம் சமஷ்டி அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தது. 1876 இல் இந்தியர் சட்டம் (Indian Act 1876) அமுல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக அவர்களது உரிமைகளைப் பறித்து காலனித்துவ ஆட்சி முறைக்குள் அவர்க