இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 3 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்

Friday 9 September 2022
00:00
23:23

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 3 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்

கட்டுக்கரையின் பண்பாட்டுத் தொன்மையையும், தொழில்நுட்பச் சிறப்பையும் அடையாளப்படுத்திக் காட்டுவதில் அங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் சிறு கைத்தொழிற்சாலைகளுக்கு முக்கிய இடமுண்டு. தென் தமிழகத்திலும், இலங்கையிலும் இரும்பின் பயன்பாட்டை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களாவர். இதன் விளைவால் இதுவரை காலமும் கல்லாயுதங்களைப் பயன்படுத்திவந்த மக்கள் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தமாற்றம் பெருங்கற்கால மக்களின் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் புரட்சிகர மாற்றங்களேற்பட வழிவகுத்தன. இங்கு இரும்புத்தாதின் படிமங்களை அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகளிலும், பிறதேவைகளுக்கு மண்ணகழப்பட்ட ஆழமான குழிகளிலும் பரவலாகக் காணமுடிந்தது. பெருங்கற்கால கலாசார மண் அடுக்குகளில் அப்பண்பாட்டு மக்கள் இரும்பை உருக்கிக் கருவிகளைச் செய்ததற்கான சான்றுகள் (Iron Slacks) அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்விலிருந்து இங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியவர்கள் என்பது உறுதியாகின்றது.  தொல்லியல் அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். தொல்லியலாளர் அல்ஜின் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இருபக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் உள்ள தேரிக் கலாசாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் நாக இன மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் அடையாளப்படுத்துவதில் 2016 -2017 காலப்பகுதியில் நாகபடுவான் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்விடம் கட்டுக்கரைக்கு வடக்கே ஏறத்தாழ 50 கிலோ மீற்றர் தொலைவில் பூநகரிப் பிராந்தியத்தின்  காட்டுப் பகுதியிலுள்ள சிறிய கிராமமாகும். இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயரே நாக மக்களோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இப்பெயர் நாகர்களின் குளம் என்ற பொருளிலேயே  பயன்படுத்தப்பட்டுள்ளது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இது சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் நாகர்களின் குளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில் அழைக்கப்பட்டு வருகின்றது. கலாநிதி இரகுபதி நாகபடுவான் என்ற இடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக் கொண்ட மக்கள்  வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார்.

#கட்டுக்கரைஅகழ்வாய்வு #Kaddukkaraiarchaeologicalstudies #malvathuoya #Aruviyaru #kaddukkarai #kaddukkaraikulam #NorthernSriLanka #Universityofjaffna #Historicalheritage

More ways to listen