சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள் | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன்
இலங்கையின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தொழில்புரிய வந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதி வரை இந்த நாட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. இவர்கள் வேலை இல்லாத காலப்பகுதிகளில் தமிழ்நாட்டின் தமது சொந்த கிராமங்களுக்கு சென்று சிறிது காலம் தம் உறவினருடன் இருந்துவிட்டு மீண்டும் இங்கே வந்தனர். இவ்விதம் மீண்டும் வருபவர்கள் “பழையல்கள்” (பழையவர்கள்) என அழைக்கப்பட்டனர். பழையவர்கள் மீண்டும் தமது தோட்டங்களுக்கு வந்தபோது மேலும் பல உறவினர்களையும் ஊரவர்களையும் தம்முடன் கூட்டிக்கொண்டு வந்தனர். இவர்கள் ஒரு கங்காணியின் கீழ் வந்தவர்களாக கருதப்படாமல் சுயமாக புலம்பெயர்ந்தவர்கள் எனக் கருதப்பட்டனர். வேலைதேடி இலங்கை நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு, இலங்கைத் தேயிலை தோட்டங்களில் உடனடியாக வேலை வழங்கப்படும் என்று உறுதிமொழி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு எப்போதும் விரும்பியபடி வந்து போகலாம் என்ற விதத்தில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. 1923 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தத்தின் பின