மலையக இளைஞர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியும் தொழில்சார் பயிற்சியும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி
மலையகத் தமிழரிடையே படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ளதோடு, பாடசாலை செல்லாதோர் விகிதம், பாடசாலைக்கல்வியை இடைநடுவில் விட்டு விலகுவோரின் விகிதம் என்பன உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. மலையக மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி தொடர்பான அவர்களது பெற்றோரின் அலட்சியப்போக்கு, பிள்ளைகளிடம் கல்வியில் ஆர்வம் போதாமை, இரண்டாம் நிலைக்கு அப்பால் கல்வியைத் தொடர்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கு மலையகத் தமிழ்ப்பாடசாலைகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதாமை, பாடசாலைகளில் ஏனைய பௌதீக வளங்கள் குறைவாகவிருத்தல் போன்றவற்றாலேயே மலையக மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். கடந்த காலங்களில் தோட்ட இளைஞர், யுவதிகளிடையே வேலையின்மை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. பருவ வயதையடைந்த உடனேயே அவர்கள் தோட்டத் தொழிலாளராகப் பதிவுசெய்யப்பட்டதால் கல்விகற்பதிலோ, தமது வினைத்திறன்களை அபிவிருத்தி செய்து கொள்வதிலோ அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கடந்த சுமார் இரு தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் ஆரம்பக்கல்வியையும் கனிஷ்ட இரண்டாம் நிலைக்கல்வியை