மன்னார்ப் படுகை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வும் அகழ்வும் : அபிவிருத்திக்கான வாய்ப்பா, சாபமா? | வை. ஜெயமுருகன்
தமிழர் தாயக உருவாக்கம் என்பது, வலுவான அரசியல் ஒருங்கிணைப்பிற்கு ஈடான அதன் அரசியல், பொருளாதார நலன்கள் பற்றிய ஆழமான பார்வையின் தளத்தில் வளரவேண்டும். இலங்கை அரசின் அரசியல், பொருளாதார கொள்கையின் முக்கிய நோக்கம் என்பது மாற்று இனங்களின் உடனடி அழிப்பாக (Direct physical destruction) இருப்பதை விட, மற்றொரு சமூகத்தை மௌனமாகக் கைப்பற்றி வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் (forced assimilation) முறையாகவே இருக்கிறது. இது பல்வேறு வகையான அரச சார்பு காலனிகளை நிறுவுவதன் மூலம் நடைபெறும். காலனித்துவச் செயற்பாட்டின் போது கட்டாய ஒருங்கிணைப்பு, பிரதேச அபிவிருத்தியின் பெயரில் அரங்கேறும். அதற்கு வெளி உலக நிதிகளும் கச்சிதமாகப் பாய்ச்சப்படும்.
இந்நிலையில், இவற்றின் தொடர்ச்சியாக ‘மன்னார் எண்ணெய்வள ஆய்வும் அதனை அகழ்வதற்கான முன்னெடுப்பும்' தற்போது இடம்பெறவிருக்கிறது. போரின் பின்னாலான ஒரு பெரிய முன்னெடுப்பாக இடம்பெறவிருக்கும் மன்னார் படுகை எண்ணெய் வள ஆய்வு பற்றிய ஒரு மதிப்பீடு மிக அவசியம். இச் செயற்பாட்டில், இக்கட்டுரையாக்கம் ஒரு முன்னெடுப்பை தொடங்க முயல்கிறது.