அடையாள மீட்பைத் தேடும் ஆதிக்குடிகளின் குரல் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்
இலங்கையின் கிழக்கிலங்கைக் கரையோரங்களில் வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகளின் நாட்டாரியலுள் ஆழ உட்புகாத ஆய்வாளர்களினாலும், ஏனைய சமூகங்களினாலும், நாம் கரையோர வேடர்கள் அல்லது கடல் வேடுவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறோம். ஆனால் இவ்வாறு தொழில் ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ அழைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கிழக்கிலங்கையில் வாழ்கின்ற எமக்கு பெரும்பாலான தொல்லை தருபவர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இன்று அதன் பட்டியலில் ஏனைய இனத்தினரும் சேர்ந்து கொண்டு விட்டனர். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளைத் தமக்குச்சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக பேரினவாதம் எமக்கு உதவுவதான பாசாங்கு செய்து கொண்டு எம்மை அவர்களின் கீழான பூர்வகுடிகளாக அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டு இருப்பதும் இங்குதான் ஈடேறிக் கொண்டு இருக்கின்றன. இன்று இலங்கையின் ஆதிப்பிரஜைகளான எம்மை பற்றிய உரையாடல்களும், செயற்பாட்டு முன்னெடுப்புக்களும் ஏதோ எம்மை பரிதாப நோக்குடன் பார்ப்பதாகவும், வேற்று ஜந்துக்கள் போலவே காட்ட முனைவதாகவுமே அமைந்து விடுகின்றமை கண்டனத்திற்குரிய விடயமாகும். முதலில் நாம் எம்மை எவ்வாறு அழைக்க விரும்புகிறோம்?, எவ்வாறு வாழ விரும்புகின்றோம