கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : தமிழ் இலக்கியங்கள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்
இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் கிடைத்த இலக்கியங்களில் வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாணவைபவ மாலை என்பன வட இலங்கையில் உருவானவை. கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசல புராணம் என்பன திருக்கோணமலையில் தோன்றியவை. மட்டக்களப்புப் பூர்வசரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன மட்டக்களப்புப் பிரதேசத்தில் தோன்றியவை. இன்று கிடைக்கும் வட இலங்கை இலக்கியங்களில் மிகப்பழையதாகக் கருதப்படுவது வையாபாடல். இப்பெயர் அதன் ஆசிரியரான வையாபுரிப் புலவர் பெயரால் உண்டானது[2]. இந்நூலுக்கு நூலாசிரியர் சூட்டியபெயர் “இலங்கை மண்டலக் காதை” என்பதாகும். வையாபாடலிலுள்ள அகச்சான்றைக் கொண்டு வையாபுரிப் புலவர் யாழ்ப்பாண அரசனான முதலாம் சங்கிலிக்கும் பரராசசேகரனுக்கும் சமகாலத்தில