கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்
ஒவ்வொரு சமூகக்குழுக்களும் தமக்கு வாலாயமான பண்பாட்டு நகர்வுகளுள் பல முன்னெடுப்புக்களை, கால வர்த்தமானங்களுக்கு அமைவாக ஈடேற்றிக் கொண்டுள்ளமையே வரலாறாகின்றது. அவ்வாறான நிலைப்பாடானது இயல்பான முறையிலும், வலிந்து புகுத்தப்பட்ட வடிவிலும் குறித்தவொரு சமூகத்தில் தாக்கம் செலுத்தியே வந்துள்ளது. இதற்கு தீவின் ஆதிப்பிரஜைகளான வேடரும் விதிவிலக்கல்லர். வேடர்கள் என்போர் இன்று நாம் காணுகின்ற ஈழத்து சமூகங்களில் ஆதிப்பிரசைகள் எனக் கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. ஆரியக் குடியேற்றங்களிலும் சரி, பௌத்த மதப் பரம்பலிலும் சரி அவற்றின் திடீர்ப் புனைவு நிலைக்குள் உள்வாங்கப்படாமல், சவால் விட்ட பெருமளவு இயக்கரும் நாகரும் வேடர் என்ற சமூக அமைப்பினுள் இருந்தே வந்தவர்கள் என்பதே நிதர்சனத் தெளிவு. தீவின் கிழக்குக் கரையோரத்தினை அண்டியே பெரும்பாலான கடலோர வேட்டுவக் குடிகள் இன்றும் காணப்படுகின்றனர். ஆரம்ப கால கடலோர வேட்டுவக்குடிகளின் ஆதிக் கிராமமாக இன்று மட்டக்களப்புத் தமிழகத்தின் செங்கலடிப் பிரதேச பிரிவுக்குள் காணப்படுகின்ற “களுவன்கேணி” எனும் மீன்பிடிக்கிராமமானது திகழ்கின்றது. #aboriginalculture #indigenouspeoples #tamil #SriLanka #veda #his