கட்டிப்போட்ட கயிறுகளும் சங்கிலிகளும் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன்
இன்னமும்கூட தமிழ்ச் சமூகத்தில் பெண்கள், ஆண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்க வாதத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதற்கு அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் இந்துமதமும் அதில் மிக தந்திரமாக நுணுக்கமான முறையில் பின்னப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் “பதிவிரதம்” என்ற மிகப் பிற்போக்கான எண்ணக்கருவும் காரணமாகும் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் இந்த நிலைமையே ஆண்களைவிட பெண்கள் அதிக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படவும் அதேசமயம் ஆண்களைவிட குறைந்த கூலி அவர்களுக்கு வழங்கப்பட்ட போது அதனை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளவும் அவர்களின் மனநிலையை தயார் செய்தது.
அதேசமயம் கொழுந்து மலையில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் அவர்களின் பிரதான தொழிலைத் தவிர வீட்டிலும் பல்வேறு வேலைகளையும் அவர்களே கவனித்தனர். காலனித்துவ காலம் முழுவதும் பிரித்தாளும் கொள்கையாக சாதிமுறை, இந்து தர்மத்தில் மிக ஆழமாக பதிந்து போய்விட்ட கர்மவினை, விதி, மற்றும் ஆண் பெண் பால்நிலை வேறுபாடுகள் என்பனவும் தீவிரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதனை ஆய்வாளர்கள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது கூலித் தொழிலாளர்கள், அவர்கள் தமது சுய விருப்பத்தின் மீது சுதந்திரமாகவே தோட்டங்களில் வாழ்கிறார்கள் என்று ஒரு மாயத்தோற்றத்தை வெளியுலகத்துக்கு காட்டிய போதும் “அவர்கள் எல்லாவிதங்களிலும் கண்ணுக்குத் தெரியாத கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டிப் போடப்பட்டு இருந்தனர்” என காலனித்துவ செயலாளர் எமர்சன் டெனன்ட ( Emerson Tenant – 1848 ) தெரிவிக்கின்றார்.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள் #தேயிலைத்தோட்டம் #1000ரூபாசம்பளம்