தோட்டத் தொழிலாளர்களும் அதிகார வர்க்கத்திற்கெதிரான முரண்பாடுகளும் | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன்
மலையக மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்றவை பற்றி எல்லாம் ஆராய்ந்த ஆய்வாளர்கள் "ஏன் இந்த மக்கள் கூட்டத்தினர் தம்மை நசுக்கி, அடக்கி, ஆளுகின்றவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை" என்று வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு துன்ப துயரங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டு எவ்வாறு இவர்களால் இவ்வளவு நீண்ட காலம் வாழ முடிந்தது என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை காணவும் முயன்றிருக்கிறார்கள். வரலாற்றுக் காலம் முழுவதும் "நீ எமக்கு எதிராக ஏதும் செய்ய முற்பட்டால் அதற்கான கடுமையான தண்டனை உனக்கு வழங்கப்படும்" என்ற மௌனமான பயமுறுத்தல் இம்மக்களை எழ விடாது தடுக்க எப்போதும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயமுறுத்தல் இந்த மக்களுக்கு மாத்திரமன்றி ஒடுக்கப்படும் மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அங்கெல்லாம் ஒடுக்குமுறையாளர்களால் விடுக்கப்படும் பயமுறுத்தலாகும் என்பது பொதுவான ஒரு எடுகோள். எனினும் அவ்வப்போது அதிகார வர்க்கத்தின் மீது கோபம் ஏற்பட்ட போதெல்லாம் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு செயல்கள் மூலம் தம் கோபத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டார்கள் என்பதனை இவர்களது வரலாற்றை நுணுகி ஆராயும் போது புரிந்து கொள