தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு | அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பரமு புஸ்பரட்ணம்
திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனிநிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் கல்வெட்டொன்று காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திபாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகின்றது. இம்மலையின் மேற்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம் சக்தி வழிபாட்டு மரபுக்குரிய சக்கரமாக இருக்கலாம் எனப் பேராசிரியர் பொ. இரகுபதி குறிப்பிடுகின்றார். இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் இரு வரிகளும், ஏன