இலங்கையின் பாலுற்பத்தித் துறை சந்திக்கும் சவால்கள் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும். இந்த மாடுகளைக் கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது.
அதிக பாலுற்பத்தியைக் கொண்ட மாடுகளை பெற இரண்டு வழிமுறைகள்தான் உள்ளன. ஒன்று நல்லின மாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும். இந்த முறையில் பல தடவைகள் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மற்றைய வழி இருக்கும் மாடுகளை தரமுயர்த்துவது[upgrading]. இந்த வழியில் இரண்டு முறைகளை கையாளலாம். ஒன்று நல்லின காளைகளை இறக்குமதி செய்து பண்ணையாளருக்கு வழங்கி அவற்றைக் கொண்டு இனப்பெருக்கம் செய்து பண்ணைகளை தரமுயர்த்துவது. மற்றையது தரமான காளைகளின் உறைவிந்தணுக்களை [frozen semen] இறக்குமதி செய்தோ அல்லது தரமான காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்துகளை உறையச் செய்து அவற்றைக் கொண்டு செயற்கை சினைப்படுதல் மூலம் மாடுகளை தரமுயர்த்துவது.
வெளிநாட்டு மாடுகளை இறக்குமதி செய்வதன் மூலம் சடுதியாக பாலுற்பத்தியை கூட்ட முடியும் என்ற போதும் அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மாடுகளில் இருந்து சாதகமான பயனை பெற முடியவில்லை. கொண்டு வரப்படும் மாடுகளின் இனம், காலநிலை, வளர்ப்பு முறை, உணவு முறை வேறுபாடு, நோய்கள் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்திருந்தன. இந்த மாடுகள் மீது முதலிட்டவர்கள் பாரிய நட்டத்தை சந்தித்திருந்தனர். இலங்கையின் கால்நடை துறை அதிகாரிகளின் சரியான ஆலோசனைகள் இன்றியும் இலங்கை கால்நடை இனப்பெருக்க கொள்கைக்கு முரணாகவும் [Breeding policy] மேற்படி மாடுகள் கொண்டு வரப்பட்டதும் இதற்குரிய முக்கிய காரணமாகும்.
இலங்கையில் உள்ள மாடுகளில் கணிசமானவை பாலுற்பத்தி செய்யாதவை. அவற்றில் தற்போது பாலுற்பத்தியில் இருப்பவை [milch animals] அண்ணளவாக 23% ஆகும். உற்பத்தியில் பங்களிக்காத பசு மாடுகளையும் ஆண் மாடுகளையும் குறைக்கும் அல்லது கழிக்கும் முறையான முறை இலங்கையில் இல்லை. மாடுகளைக் கொல்வது மதத்துடன் பிணைக்கப்பட்டு அரசியலாகப்பட்டுள்ளது. தரமான கொல் களங்களும் [slaughter houses] கிடையாது. ஒரு வெற்றிகரமான பண்ணை இயங்க தேவையற்ற மற்றும் உற்பத்திக் குறைவான மாடுகள் கழிக்கப்பட வேண்டியது அவசியமானது.