இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என். கே. எஸ். திருச்செல்வம்
இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர். இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங்களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.