தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
மருத்துவர் கிறீன், தமிழில் விஞ்ஞானம் அறிமுகமாகாத காலத்தில் ஆங்கில மருத்துவத்தைத் தமிழிற் கற்பித்தவர்; தமிழில் விஞ்ஞானந் தந்த தந்தை; மருத்துவத் தமிழ் முன்னோடி; தமிழ்க் கலைச்சொல்லாக்க முன்னோடி என்று தமிழறிஞர்களால் விதந்துரைக்கப்படுகிறார்.
“தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியுமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு இருந்தது. தமிழர்களுக்கே தமிழ்மொழி மீதிருந்த நம்பிக்கையிலும் பார்க்க அமெரிக்க நாட்டவரான மருத்துவர் கிறீனுக்கு அந்தக் காலத்திலேயே தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியும் என்ற கூடிய நம்பிக்கை இருந்ததைக் கண்டு எமது சமுதாயம் வெட்கப்படல் வேண்டும்” என்று அம்பிகைபாகன் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் நாவற்குழி என்னும் கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த அம்பிகைபாகன் சர்வதேச புகழ்பெற்ற கவிஞரும் கல்வியியலாளருமாவார். இவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவுக்கு இரு தடவைகள் செல்லும் வாய்ப்புக் கிடைத்த போது கிறீனது பேரன் தோமஸ் டி. கிறீனை சந்தித்ததுடன் கிறீனது கல்லறைக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி, மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய அருந் தொண்டை நினைவு கூர்ந்த பெருமகனார்.
மருத்துவர் கிறீன் தம்மிடம் மருத்துவம் கற்றவர்களில் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் உள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார். தாமும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். கிறீன் முதன்முதலில் மொழிபெயர்ப்புக்கு எனத் தேர்ந்தெடுத்த நூல் கல்வின் கட்டர் எழுதிய அங்காதிபாதம் ஆகும். இப்பணி 1851 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. ஆறு மாத காலத்துக்குள் மொழிபெயர்ப்புப் பணி பூர்த்தியாகியது. 1852 இல் அங்காதிபாத நூல் அச்சிடப்பட்டது.
உலகில் ஆங்கில மருத்துவ நூல் ஒன்று தமிழில் முதன்முதல் மொழிபெயர்க்கப்பட்டது யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தொண்டாற்றிய அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீனாலேயே. இது யாழ்ப்பாணத்தில் 1852 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இந்நூலின் 1852 ஆண்டுப் பதிப்பின் மின்னணுப் பிரதிகூட எமக்குக் கிடைக்கவில்லை. இந்நூலின் 2 ஆவது பதிப்பு 1857 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்திய அமெரிக்க மிசனுக்காக சென்னையில் அச்சிடப்பட்டது.
அரசாங்க உதவியோ, வரவேற்போ கிடைக்காத போதிலும் தமிழில் மருத்துவ நூல்களை வெளியிடும் முயற்சியை கிறீன் கைவிடவில்லை. The Duplin Practice of Midwifery என்ற பிரசவ மருத்துவ நூலை 1856 இல் மொழிபெயர்த்தார். இது யாழ்ப்பாணத்திலுள்ள இறிப்பிலி, ஸ்றோங்கு என்பவர்களது அச்சகத்தில் 1857 இல் அச்சிடப்பட்டு ’பிரசவ மருத்துவம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.